வெள்ளி, 30 டிசம்பர், 2011

இது உலகமுங்க!

சினிமா ஸ்டார் கட் அவுட்டுக்கு
பால் ஊத்துவான்!
சுற்றத்தை பிணமாக்கி
தண்ணீர் ஊத்துவான்!

கொள்ளையடித்த காசில்
கோவில் கட்டுவான்!
கடவுளை கல்லாக்கி
கல்லா கட்டுவான்!

நான் கடவுள் என்றுணர்ந்த
சித்தர்கள் இங்கு சிலரே!
நான்தான் கடவுள் என்று திரியும்
எத்தர்களும், பித்தர்களும் மிகப்பலரே!




ஊதும் ஊடகங்களும், உழைக்காமல் உயர்பவர்களும்!

கள்ள சாராயம் வித்த காசில்
கட்சி ஆரம்பித்து, பதவி பெற்று,
கருப்பு பணத்தை வெள்ளையாக்க
கல்லூரி கட்டி, கணக்கில் வராத
காசுக்கு அறக்கட்டளை நிறுவும்                                                                                களவாணிகளை கல்வி தந்தை என்பார்                                                                         காசுக்கு எழுதும் பத்திரிகைகள் !

வெள்ளி, 23 டிசம்பர், 2011

சாலை துளிகள்..


பைக்கில் போனால்
பந்தாவா,
காரில் போனால்
கலக்கலா,
நடந்து செல்பவன்
நொந்து சொல்வது!

ஓரமாய் போடா
உருப்படாதவனே,
காரிலோ பைக்கிலோ
விரைந்து செல்பவன்
முறைத்து சொல்வது!

வெள்ளி, 16 டிசம்பர், 2011

பாதையும் பயணமும்

இணையதளத்தில் அளவிட முடியாத தமிழறிந்த மனித மனங்களுடன் அளவளாவிட இன்று முதல் இந்த பாதை இனிதே பயணிக்கிறது. தமிழில் ஒரு blog-யை ஆரம்பித்ததற்கு காரணங்கள் பல. அவற்றுள் சில: 1 . மனிதன் என்ற ஒரு வகை உயிரினம் தோன்றி வளர்ந்த ஆரம்ப காலங்களில் இருந்தே  தன்னை பற்றியும்,பிறவற்றை பற்றியும் அறியவும்,அறிந்ததை சொல்லவும்,பிறர் சொல்வதை புரிவதற்கும் உண்டான மொழி தமிழ் என்பதாலும் 2 . அப்படிப்பட்ட தமிழ்கூறும் நல்லுலகம் நசித்து நாசமாகி கொண்டு இருப்பதாலும் 3 . சண்டையை,சமயத்தை,சாதியை வளர்த்த தமிழன் சயின்ஸ்-ஐ வளர்க்காமல் போனதாலும் 4 . அப்படி அறிவு (மெய்யறிவும் சரி, பகுத்தறிவும் சரி ) தமிழ் பேசும் மக்களுக்கு தேவை என்பதாலும் எனது துறையான மருத்துவம், குறிப்பாக மனநல மருத்துவம் தொடர்பான கருத்துக்கள்,கட்டுரைகள் , கவிதைகள் மற்றும் கதைகள் எழுத தீர்மானித்துள்ளேன். தமிழர்கள் ஆதரிப்பாராக. எனது எழுத்துக்களில் பிழை இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்வேன்.